பாஜகவில் இணைந்த விஜயதரணி: காங்கிரஸ் கோஷ்டி பூசலின் எதிரொலியா?

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட வேண்டும் என்று விஜயதரணி கேட்டுக்கொண்டதை, காங்கிரஸ் தலைமை நிராகரித்ததாகத் தகவல்.
விஜயதரணி (கோப்புப்படம்)
விஜயதரணி (கோப்புப்படம்)ANI
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

3 முறை சட்டப்பேரவைக்குத் தேர்வான விஜயதரணி, தில்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என்று விஜயதரணி கேட்டுக்கொண்டதை காங்கிரஸ் தலைமை நிராகரித்துவிட்டதாகவும், அதன் காரணமாகக் கட்சியைவிட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களாகவே விஜயதரணி தில்லியில் முகாமிட்டிருந்தார். பாஜகவில் அவர் சேரக்கூடும் என்கிற யூகங்கள் தொடர்ந்து இருந்து வந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அவர் வாய்ப்பு கேட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசலின் காரணமாக விஜயதரணி வாய்ப்பை இழந்தார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதில் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மதியம் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயதரணி, பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் விஜயதரணி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜகவில் இணைந்த சகோதரி விஜயதரணியை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய விஜயதரணி, "மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளைச் செய்து வருகிறது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசியக் கட்சியான பாஜக வலுவாகக் காலூன்ற வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. பெண்களுக்கு பாஜக தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால் கட்சியில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in