திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு

"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார்."
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனிANI

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்குமாறு திமுகவிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தங்களுக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்களவை இடம் கேட்டதற்கு திமுக அளித்த பதில் குறித்து தெரிவிக்கையில், "இந்தத் தேர்தலில் மக்களவைத் தொகுதிகளை மட்டுமே தேர்வு செய்து மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கி வருகிறோம். மாநிலங்களவை இடம் குறித்து எந்தக் கட்சியிடமும், எந்த முடிவையும் இன்னும் சொல்லவில்லை. இது முடிந்தபிறகு நிச்சயம் அதுகுறித்து யோசித்து, உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்கள்" என்றார் காதர் மொய்தீன்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நவான் கனி 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in