கோப்புப்படம்
கோப்புப்படம் படம்:

கொமதேக-வுக்கு நாமக்கல் தொகுதி: உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

எங்களுடைய செயற்குழு, ஆட்சிமன்றக் குழு கூடியபிறகு வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம் - ஈஸ்வரன்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக, கொமதேக இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கொமதேக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கிடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் கொமதேக-வுக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

"2019 மக்களவைத் தேர்தலைப் போல, ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அதே நாமக்கல் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிடுகிறோம். தமிழ்நாடு, புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் எங்களுடைய கூட்டணி வெற்றி வாகை சூடும். உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம். எங்களுடைய செயற்குழு, ஆட்சிமன்றக் குழு கூடியபிறகு வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்."

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் 2.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in