படம்: https://twitter.com/tndiprnews
தமிழ்நாடு
மழை வெள்ளப் பாதிப்பு: தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி ஒதுக்கிட அரசாணை
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த நிதி நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராகி வந்த விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
இந்த மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த 2.60 லட்சம் விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 201.67 கோடி நிவாரண நிதி ஒதுக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த நிதி நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.