அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஐ.டி. துறைக்கு மாற்றியது ஏன்?: முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

"ஐ.டி.க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, நமது திமுக அரசின் ஆட்சிக்காலமும் இருக்கவேண்டும்.."
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஐ.டி. துறைக்கு மாற்றியது ஏன்?: முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகரமாக மாற்றுவோம் என உமாஜின் தமிழ்நாடு 2024 உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

உமாஜின் தமிழ்நாடு 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, இணைக்கப்பட்ட நுண்ணறிவு, நிலைத்தன்மை, உலகளாவிய கண்டுபிடிப்பு மையங்கள் மற்றும் உயிர்ப்பூட்டல், காட்சி விளைவு, விளையாட்டு மற்றும் கனிப்படக் கதை, மெய்மை விரிவாக்கம் போன்ற முக்கியப் பொருள்கள் மீது மாநாட்டில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தல் என்கிற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் 120 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச வைஃபை சேவைகள் வழங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

மாநாட்டில் முதல்வர் உரையாற்றியதாவது:

"தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதலில் நான் பாராட்டுகிறேன்.

மூன்று தலைமுறையாக, நாட்டிற்கு தொண்டாற்றி வரும் குடும்பத்திற்குச் சொந்தக்காரர் அவர்! இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி-யிலேயும், உலகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யிலேயும் படித்தவர். பல ஆண்டுகள் வெளிநாட்டில் படித்து வேலை செய்திருந்தாலும், அங்கேயே தங்கிடாமல், தமிழ்நாட்டுக்குத் திரும்ப வந்து, இங்கேயும் தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கிடாமல், அவருடைய அப்பா, தாத்தா போலவே அரசியலில் பங்கெடுத்து, தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர் அவர்.

நம்முடைய ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச்சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐ.டி.துறைக்கு மாற்றினேன். அவரை நான் மாற்றியதற்கு காரணம் ஐ.டி. துறையிலேயும், நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும்.

ஐ.டி.க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, நமது திமுக அரசின் ஆட்சிக்காலமும் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறோம்.

நம்முடைய தமிழ்நாட்டில் இந்தத் துறைகளில் வர்த்தகம் துவக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும்! மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றவேண்டும். அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.

வளர்ச்சி என்பதை வெறும் எண்கள் மட்டும் அல்ல, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் காட்டுகிறோம். அனைத்து துறைகளும் அதற்கான செயல் திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. அதில் முக்கியமான துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கின்றது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஐ.டி. துறையுடன் வளர்ச்சியும், முன்னேற்றமும் இப்போது நம்முடைய கண்முன்னாடி தெரிகிறது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான இந்த துறையில், தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகரமாக மாற்றுவோம்! தகவல் தேடிவரும் நகரமாக ஆக்குவோம்! தொழில்நுட்பத் துறையினர் தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உருவாக உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்!."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in