தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை: திமுக, அதிமுக, பாஜக முன்வைத்தது என்ன?

"பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையைக் குவிப்பது, சிசிடிவி கேமிரா பொறுத்துவது உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும்."
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (கோப்புப்படம்)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (கோப்புப்படம்)ANI

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அருண் கோயல் மற்றும் முக்கிய அதிகாரிகள் நேற்றிரவு சென்னை வந்தார்கள். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது, வாக்குச் சாவடிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தேர்தல் ஆணையத்துடனான கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கட்சியின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். இதன்பிறகு, ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி:

"தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை அடிப்படை கோரிக்கையாக வைத்துள்ளோம். கடந்த தேர்தலுக்கும், இந்தத் தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.

வாக்குப் பெட்டி மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையே விவிபேட் இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இது சட்டத்துக்குப் புறம்பானது. செலுத்தும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு இயந்திரத்துக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் இயந்திரத்தை வைப்பதும், வாக்கு எண்ணிக்கையின்போது இதை 100 சதவிகிதம் எண்ணிப் பார்க்க முடியாது என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், 1 முதல் 2 சதவீதம் வரை தவறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்கிறது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 2 சதவீதம் என்றால், ஏறத்தாழ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரை இருக்கிறது. இது ஒரு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்க உதவும். புதிதாக ஒன்றை இணைக்கும்போது சந்தேகம் எழுகிறது. அதைப் போக்குவதற்கு திருப்திகரமான பதில் எதையும் தேர்தல் ஆணையம் தரவில்லை. விவிபேட் இயந்திரத்தை வைப்பதன் மூலம், பதிவான வாக்கை மாற்ற முடியும். ஆகவே, இதுபோன்ற முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

எந்த மனுவைக் கொடுத்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுப்பிதான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. எனவே, கொடுக்கப்படும் புகார்களில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒரு கட்டமாக நடைபெற்றாலும், பல்வேறு கட்டங்களாக நடைபெற்றாலும் திமுக அதை எதிர்கொள்ளத் தயார். "

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

"தேர்தலை ஜனநாயக ரீதியில் நியாயமாக நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளைப் பட்டியலிட்டு கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளோம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். பொதுவாகவே, வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் முழுமையாக சரிபார்ப்பதில்லை. இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்கள் இன்னும் நீக்கப்படவில்லை. தகுதியுடைய வாக்காளர்கள் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் பல்வேறு வாக்குச் சாவடிகளில் உள்ளன. இந்த முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

இதேபோல பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அங்கு கூடுதல் பாதுகாப்புப் படை, சிசிடிவி கேமிரா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வாக்குச் சாவடிகளுக்குக் கூடுதல் பாதுகாப்புப் படை அனுப்புவது குறித்தும் எங்களுடைய கருத்தைக் கூறினோம்.

தமிழ்நாட்டில் உள்ளூர் காவல் துறை பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதுதொடர்பாக, பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தப் பலனும் இல்லை. எனவே, கூடுதல் மத்தியக் காவல் படை, துணை ராணுவப் படையைத் தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டும் என்றோம்."

பாஜக தலைவர் கராத்தே தியாகராஜன்:

"மாநிலத் தலைவர் வழங்கிய அறிவுரைகளின்படி, எங்களுடையக் கருத்துகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்படுவதை திமுக நிறுத்தியுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமிராக்களை பொறுத்த வேண்டும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையைப் பணியமர்த்த வேண்டும், பறக்கும் படைகளை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளை பாஜக எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.

நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் எஸ்.பி., டி.ஐ.ஜி., மற்றும் ஐ.ஜி., உள்ளிட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பின்பற்றி தேர்தல் நடைபெற வேண்டும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in