தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது: மேக்கேதாட்டு விவகாரத்தில் துரைமுருகன் பதில்

அமைச்சர் துரைமுருகன் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.
தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது: மேக்கேதாட்டு விவகாரத்தில் துரைமுருகன் பதில்

தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இவரது விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

காவிரி நதி நீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சட்டப்பேரவையில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

அவர் பேசியதாவது:

"காவிரி மேலாண்மை ஆணையத்தில் நடந்த விஷயத்தை தான் எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டு கூறினார். காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் இறுதியானது. இரு மாநிலங்களுக்கிடையே தீர்ப்பை ஒட்டி நீர் பங்கிடுவதில் பிரச்னை ஏற்பட்டால், அதுகுறித்து விவாதித்து தீர்வு காண இரு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், ஆணையத்துக்குத் தலைவரே நியமிக்கப்படவில்லை.

ஆணையத்துக்குத் தலைவர் நியமிக்கப்படாததால் அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டம் நடைபெறவில்லை, பிரச்னைகள் எழவில்லை.

கடந்த 1-ம் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு முறை கூட்டம் நடைபெறும்போது மேக்கேதாட்டு பிரச்னையைக் கொண்டு வருவார்கள், நாங்கள் எதிர்ப்போம். பிறகு, அதை விட்டுவிடுவார்கள். ஒருமுறை வனத் துறை, சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பினார்கள். அங்கெல்லாம் இந்தத் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டது.

இறுதியாக ஒருமுறை, அவர்கள் நிறைய தவறு செய்கிறார்கள் என அமைச்சரிடம் புகார் அளித்தேன். இனி மேக்கேதாட்டு பிரச்னையை எழுப்பக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பிரச்னையை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இதேபோல பிப்ரவரி 1-ம் தேதி இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்தது. நமது நீர்வளத் துறைச் செயலர் அங்கு இருந்தார். ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்க்கிறோம், வழக்கும் தொடுத்துள்ளோம் என்று அவர் பதிலளித்தார். எனவே, இந்தப் பிரச்னை குறித்து இங்கு எழுப்பக் கூடாது என்றார். இருந்தபோதிலும், ஆணையம் அன்று இதை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு அனைவரது கருத்தையும் கேட்டது.

உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்துக்கு எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்பதால், இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுத்து மத்திய ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என கர்நாடக உறுப்பினர் பேசினார். மத்திய அரசு சார்பாக ஒருவர் அங்கு உறுப்பினராக இருந்தார். அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றத்திலிருந்து எவ்வித ஆணையும் நமக்குக் கிடைக்கவில்லை, இந்தத் திட்டம் குறித்து இங்கு ஆய்வு செய்ய இயலாது, ஆகையால் இந்தத் திட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு உறுப்பினர் கூறிவிட்டார். கேரள உறுப்பினர் கூறுகையில், அவரும் இந்தத் திட்டத்தைத் திருப்பி அனுப்பலாம் என்று கூறிவிட்டார். புதுச்சேரியும் இதையேதான் கூறியது. கர்நாடகம் மட்டும்தான் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னது.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துப்படி மேக்கேதாட்டு திட்டத்தை திருப்பி அனுப்பலாம் என ஆணையத் தலைவர் கூறினார். திருப்பி அனுப்பலாம் என்று கூறிய அதே ஆணையத் தலைவர், கூட்டத்தில் நிகழ்ந்ததை எழுத்துப்பூர்வ ஆவணமாக அனுப்பினார். இங்குதான் அவர்கள் தவறு செய்தார்கள்.

அதில், மேக்கேதாட்டு திட்டத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அம்சங்களை பரிசீலித்து இந்தத் திட்டம் சாத்தியமா இல்லையா என்பதை முடிவெடுக்கவும், மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். உறுப்பினர்கள் கூறிய கருத்து வேறு, இதில் வந்த தகவல் வேறு. இதை எதிர்த்து உடனடியாக நாம் பதிலளித்துவிட்டோம்.

மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்புவதால் மட்டுமே இந்தத் திட்டத்தை செயல்படுத்திவிட முடியாது. வனத் துறை, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இத்தனை அனுமதிகளையும் பெற்றாலும்கூட, தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமல் அவர்களால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது.

ஆனால், கர்நாடகத்தில் ஓர் அரசியலை நடத்துகிறார்கள். பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும் இதைக் கையிலெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த எவரும் இதற்கு இசைவைத் தர மாட்டார்கள். கூட்டணியில் இருப்பதால் பேசலாமே என்றார்கள். ஆனால், பேசக் கூடாது என்பதுதான் திட்டம். பேசிபேசி தான் தீர்ப்பாயத்தைக் கொண்டுவந்தோம்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு இருக்கும் அக்கறை, ஆர்வம், வேகம் எங்களுக்கும் இருக்கிறது" என்றார் துரைமுருகன்.

இவரது விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in