மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம்: எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தில், அதிகார வரம்பை மீறி மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதுதொடர்பாக விளக்கமளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது என்றார்.

அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் காவிரி நிதி நீர் பிரச்னை குறித்து விடியா திமுக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்துக்குப் பாதகமானது. இதை நான் சுட்டிக்காட்டினேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டு செயல்பட மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த 1-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் 28-வது கூட்டத்தில், வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்க அனுமதித்துவிட்டார்கள். எதிர்ப்பை மீறி விவாதம் நடைபெற்றிருந்தாலும், நமது அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்.

தற்போது காவிரி மேலாண்மை ஆணையம், அந்த அதிகார வரம்புக்கு சம்பந்தமில்லாமல் மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கருத்தை அனுப்பியுள்ளார்கள்.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர் பதிலளித்தார். 28-வது ஆணையக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதையே இன்றுதான் மேலோட்டமாகக் கூறியிருக்கிறார்கள்.

மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கருத்தை அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஆணையம் ஏதாவது முடிவெடுத்துவிட்டால், அணை கட்டப்படுவதற்கான சூழல் உருவாகலாம் என்பதால் கேள்வி நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினோம்.

மேக்கேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக கர்நாடக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஒருபுறம் மத்திய நீர்வள ஆணையத்துக்குக் கருத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு அரசு நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அங்கு விவாதிக்கப்பட்டது அதிகாரத்துக்கு மீறிய செயல் என்று கூறி சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தால், அரசு சரியாக செயல்படுகிறது என்று நினைக்கலாம். நாங்கள் பாராட்டியிருப்போம். இப்படி எதையும் அரசு செய்யவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டால், தீர்ப்பு எப்படி வரும் என யாருக்கும் தெரியாது. இந்த அரசு அலட்சியமாக இருப்பதன் காரணத்தால், நாங்கள் இவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in