விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை: வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

"டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வேளாண் மற்றும் உழவர் நலத் துறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"வேளாண்மைத் துறைக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிதியை ஒதுக்கவில்லை, புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. பல்வேறு துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் நிதிநிலை அறிக்கை என சமர்ப்பித்துள்ளார்கள். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடையாது.

திமுக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை வழங்கவில்லை. இதேபோல, ஒரு மெட்ரின் டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், நடப்பாண்டுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையுடன் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 215 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை அறிவித்து விவசாயிகளைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைப் பெற்று, தேர்தலுக்குப் பிறகு வாக்குறுதிகளை மறப்பதுதான் விடியா திமுக அரசு.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை விவசாயிகளுக்கு சீர் செய்து கொடுக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்துக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை. தென்னை விவசாயிகளுக்கும் எந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும் எதையும் செய்யவில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in