நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை: சிறப்பு நீதிமன்றம்

எஸ்.வி. சேகர் மேல்முறையீடு செய்யவுள்ளதால், சிறைத் தண்டனையானது ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை: சிறப்பு நீதிமன்றம்
படம்: https://twitter.com/SVESHEKHER

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டிலேயே சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய எஸ்.வி. சேகர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, சிறைத் தண்டனையானது ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி. சேகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, எஸ்.வி. சேகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் எஸ்.வி. சேகருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்ததற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in