பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமில்லை: எடப்பாடி பழனிசாமி

கடன் வாங்குவதிலும் இந்தியாவில் தமிழ்நாடுதான் நம்பர் 1.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என விமர்சித்தார்.

"மக்களுக்கான திட்டங்கள், பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

ஜெயலலிதா ஆட்சியில் ஏழைகளுக்கு பசுமை வீடு திட்டம் கொண்டு வந்தோம். இதை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதோடு மூன்றாண்டு காலமாக மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உட்புற சாலைகள் சீர் செய்யப்படவில்லை. இந்த ஆண்டுதான் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். கிராமப்புறங்களில் 1.52 லட்சம் கி.மீ. சாலைகளை சீர் செய்ய வெறும் ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொகை குறிப்பிட்ட துறைக்கு ஒதுக்கப்படும். இதே ஆண்டும் அதே அளவுதான் திமுக அரசு ஒதுக்கியிருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 8.33 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு 2021 பொதுத்தேர்தலின்போது, இன்றைய முதல்வர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழ்நாட்டைக் கடனாளியாக்கிவிட்டார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டியுள்ளது.

நிதிநிலை அறிக்கைப் புத்தகத்தை எங்களிடம் கொடுக்கவில்லை. கணினியிலிருந்துதான் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். நிதிநிலை வரவு செலவு திட்டங்களைப் பார்க்கும்போது நிறைய குளறுபடிகள் உள்ளன. அவையனைத்தையும் முழுமையாக எனது அறிக்கையில் வெளியிடப்படும்.

இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு எந்தப் பலனையும் தராது.

கடன் வாங்கிதான் இந்த அரசு நடக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அனைத்திலும் தமிழ்நாடுதான் நம்பர் 1 என முதல்வர் குறிப்பிட்டார். இதைக் குறிப்பிடத் தவறிவிட்டார். கடன் வாங்குவதிலும் இந்தியாவில் தமிழ்நாடுதான் நம்பர் 1.

வருவாய் இருந்தபோதிலும், புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு நாங்கள் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம். இதை நிறுத்தி புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்தார்கள். தற்போது இந்தத் திட்டத்துக்கு வெறும் ரூ. 600 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள். மடிக்கணினி திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதற்கான நிதியை நிறுத்தி மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறார்கள். நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறுத்தி, அதற்கான நிதியைக் கொண்டு புதிய பெயரில் திட்டங்களை இவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் இத்தனை திட்டங்களை அறிவித்தபோதிலும், நிறைய கடன் வாங்கவில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in