காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மநீம போட்டி?: செல்வப்பெருந்தகை பதில்

"இந்த முறை 39 தொகுதிகளில் 39 தொகுதிகளிலும் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம்."
காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மநீம போட்டி?: செல்வப்பெருந்தகை பதில்
படம்: https://twitter.com/SPK_TNCC

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலிமையாகக் கட்டமைக்கப்படும் என கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நேற்று நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தார். செல்வப்பெருந்தகை நியமனத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பெரியார் சிலைகளுக்கு செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"அனுபவமுள்ள தலைவர்கள் மற்றும் தோழர்களை வைத்து கட்சி வலிமையாகக் கட்டமைக்கப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடையக் கூட்டணியை 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த முறை 39 தொகுதிகளில் 39 தொகுதிகளிலும் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம். எங்களுடைய வேட்பாளர்களைக் கடந்த முறையைவிட ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்துத் திட்டங்களையும் கையிலெடுத்திருக்கிறோம்" என்றார் செல்வப்பெருந்தகை.

இதனிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, "நீங்களே தகவல்கள் என்று சொன்ன பிறகு, அதுகுறித்து எதற்கு விவாதம் செய்ய வேண்டும். அது தகவல்களாகவே இருக்கட்டும்" என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in