தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ராஜேஷ் குமார் நியமனம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்
படம்: https://twitter.com/SPK_TNCC

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 2019 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். 5 ஆண்டு காலம் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ராஜேஷ் குமாரை நியமிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கே.சி. வேணுகோபால் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் நடத்தப்பட்ட முதற்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பாக முன்னிலை வகித்தது கே.எஸ். அழகிரி. தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். எனினும், கே.எஸ். அழகிரி 2019 பிப்ரவரி முதல் 2024 பிப்ரவரி வரை 5 ஆண்டுகள் இந்தப் பொறுப்பை வகித்துவிட்டார்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in