தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: துரைமுருகன்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)
அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்)ANI

கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் அந்த மாநில முதல்வர் சித்தராமையா நேற்று 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த அறிவிப்பில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறி, இதற்கென 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். மத்திய அரசு அனுமதியளித்ததும் அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபடக் கூறினார். சித்தராமையாவின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தவறினால் அதிமுக மாபெரும் அறப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது குறித்த கர்நாடக அரசின் அறிவிப்பு பற்றி தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வியெழுப்பப்பட்டது.

அவர் பதிலளித்ததாவது:

"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கலாம், குழுக்களை அமைக்கலாம், வேகமாகப் பேசலாம். ஆனால், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டுவில் ஒருபோதும் அணையைக் கட்ட முடியாது. அதுதான் சட்டம், நியாயம். எனவே, அவர்கள் பேசிக்கொண்டிருப்பதில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை" என்றார் துரைமுருகன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in