தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை

முன்னதாக, புதுச்சேரியில் இதே காரணத்துக்காக பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
ANI

புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன்-பி (Rhodaminbe-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v) - ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி ரோடமைன்-பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது."

பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படும் ரோடமைன்-பி (Rhodaminbe-B) நச்சுப்பொருளானது, ஜவுளி உற்பத்தித் துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணத்துக்காக பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நச்சு வண்ணங்கள் நம் உடலில் இருந்து வெளியேற 45 நாட்கள் ஆகும். நம் உடலில் உள்ள சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். மேலும் உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் பஞ்சு மிட்டாயைத் தடை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது

முன்னதாக, புதுச்சேரியில் இதே காரணத்துக்காக பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in