விழுப்புரத்தில் மினி டைடல் பூங்கா: முதல்வர் திறந்துவைப்பு
விழுப்புரத்தில் ரூ. 31 கோடி செலவில் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 ஜூனில் அடிக்கல் நாட்டினார். ரூ. 31 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரஅடி பரப்பளவில் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மினி டைடல் பூங்காவை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இக்கட்டடத்தின் முதலாவது இடஒதுக்கீடு ஆணையை, எஸ்யூவி ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் (SUV Startup Space) நிறுவனத்தின் எஸ். யுவராஜிடம் முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் டாக்டர். வி. ஜெய சந்திர பானு ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். லட்சுமணன், மாவட்ட ஆட்சித் தலைவர் சி. பழனி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.