கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மேக்கேதாட்டு அணைக்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

"அதிமுக மாபெரும் அறப் போராட்டத்தை முன்னெடுக்கும்."
Published on

கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக, அந்த மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறி, இதற்கென 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசு அனுமதியளித்ததும் அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபடக் கூறினார். சித்தராமையாவின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி என கார்நாடக அரசு அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வெளிப்படையாக மீறும் நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். திமுக அரசு இன்னும் எதற்காகக் காத்திருக்கிறது என்பது உண்மையில் தமிழக மக்களுக்குப் புரியவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் அதன் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு மேக்கேதாட்டு அணை குறித்து 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்குச் சாதகமாக ஆணையத்தின் தலைவர் இதை விவாதிக்க அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியது மிகப் பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பிவைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை திமுக அரசு அனுமதித்தது மிகப் பெரிய துரோகம்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்துக்குத் துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி அதிமுக மாபெரும் அறப் போராட்டத்தை முன்னெடுக்கும்" என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in