"ஐயாவுக்கு அந்த வார்த்தை வேண்டும்": வானதி சீனிவாசனின் பதிலால் சிரிப்பலை

முதல்வர் மு.க. ஸ்டாலினும் வானதி சீனிவாசனின் பதிலைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
"ஐயாவுக்கு அந்த வார்த்தை வேண்டும்": வானதி சீனிவாசனின் பதிலால் சிரிப்பலை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு தனித் தீர்மானங்கள் மீதான விவாதத்தின்போது அப்பாவு கருத்துக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும், அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும் என்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தையும் முதல்வர் முன்மொழிந்தார்.

இதில் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தீர்மானம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

"மக்கள் தொகையில் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு பறவைப் பார்வையில் பார்க்கும்போது, தென் மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதாலும் ஒரு சிறப்பான இடத்தை அடைந்துள்ளார்கள். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கைகள் குறையும்போது, நமக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்கிற ஓர் அச்சம் நியாயமானது.

எனவே, இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை பாஜக, இதிலுள்ள கவலையை முழுமையாகப் புரிந்துகொள்கிறது. இதுதொடர்பாக என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ, தமிழக பாஜக முழுமையாக அதை மேற்கொள்ளும்" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

உடனடியாக, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தீர்மானத்தை ஆதரிக்கிறீர்கள் என்று தமிழக பாஜகவை குறிப்பிட்டு பேசினார். இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், "ஆதரிக்கிறோம் என்ற வார்த்தை ஐயாவுக்கு வேண்டும்" என்று கிண்டலாக கூறினார்.

வானதி சீனிவாசனின் பதில் சட்டப்பேரவையில் சிரிப்பலையை எழுப்பியது. முதல்வர் மு.க. ஸ்டாலினும் வானதி சீனிவாசனின் பதிலைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in