போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

"தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."
போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
படம்: https://twitter.com/tndiprnews

சென்னையில் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த நிலையில், பணிமனைகளில் பயணிகளை ஏற்றக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சென்னைப் புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16-ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்று இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே, தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னைப் புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட பட வேண்டும் என்வும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in