கோட்சேவுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது: அண்ணாமலை

"சட்டப்பேரவைத் தலைவர் முறை தவறி நடந்துகொண்டதன் காரணத்தால், ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்twitter.com/annamalai_k

நாதுராம் கோட்சேவுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி, தனக்காக தயாரிக்கப்பட்ட உரையில் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி உரையை முழுவதுமாக வாசிக்காமல் நிறுத்திக்கொண்டார். எனினும், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். மேலும், ஆளுநருக்கு எதிரான கருத்துகளை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை திமுக தொண்டனைவிட மோசமாக உள்ளார். திமுக தொண்டன்கூட திமுக சார்பாக இப்படி இருக்க மாட்டான். தமிழகத்தில் ஜாதி வந்ததற்குக் காரணமே கருணாநிதி தான் என இதே சட்டப்பேரவைத் தலைவர் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நிறைய ஜாதி வன்முறைகள், படுகொலைகள் நடக்கிறது என்றால், வாக்கு அரசியலுக்காக அதை ஊக்குவித்தது கருணாநிதி என அவரே சொன்னார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். அவரது கருத்தை வெளிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கட்சி சார்ந்து பேச சட்டப்பேரவைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. சட்டப்பேரவைத் தலைவர் நேற்று நடுநிலையாக செயல்படவில்லை. ஒரு கட்சியை சார்ந்து அவர் பேசுகிறார். திமுக உறுப்பினரைப்போல பேசுகிறார். இதனால்தான் ஆளுநர் எழுந்துச் சென்றார். மற்றபடி ஆளுநர் தனது உரையை எந்தக் காரணத்துக்காகப் படிக்கவில்லை என்பதை விளக்கியிருக்கிறார்.

ஆளுநருக்காக இவர்கள் எழுதிகொடுத்த உரையில், 10 பெரிய தவறுகளைக் கண்டுபிடித்து பத்திரிகை நண்பர்களிடம் அறிக்கையாகக் கொடுத்தோம். அவற்றை தவறு என்று சொல்வதைவிட திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆளுநர் உரைக்கு இவர்கள் எழுதிக்கொடுத்தது எல்லாம் முதல்வரின் சுயபுராணம். அதில் தவறு உள்ளது, தரவுகள் தவறாக உள்ளன என்று ஆளுநர் படிக்காமல் விட்டார். ஆளுநர் படிக்க மாட்டேன் என்று சொல்வது வேறு விவாதம். அதில் பொய் இருக்கிறது என்கிறார் ஆளுநர்.

ஆளுநரை மேடையில் அமரவைத்துவிட்டு அப்பாவு என்ன பேசுகிறார். நாதுராம் கோட்சே போன்ற பெயர்களையெல்லாம் குறிப்பிடுகிறார். கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும். நாதுராம் கோட்சேவுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாதுராம் கோட்சேவுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.

சட்டப்பேரவைத் தலைவர் முறை தவறி நடந்துகொண்டதன் காரணத்தால், ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in