பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு சிறைத் தண்டனை உறுதி

ராஜேஷ் தாஸுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு சிறைத் தண்டனை உறுதி
படம்: Twitter/Shilpa1308

பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் பிரிவில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இடம்பெற்றிருந்தார். இதே பிரிவில் உடன் பணியாற்றி வந்த பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலரிடம் வந்து புகார் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது சிபிசிஐடி காவலர்கள் 4 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம், கடந்தாண்டு ஜூனில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். மேலும், மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கத் தடையில்லை என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ராஜேஷ் தாஸுக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in