பொது தொகுதி உள்பட 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்: விசிக

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை இடத்தையும் ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

நாடாளுமன்றத் தேர்தலில் 3 தனித் தொகுதிகள், 1 பொது தொகுதி என 4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் (விசிக) தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக - விசிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. டி.ஆர். பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளைப் பட்டியலிட்டு, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினரிடம் விசிக சார்பில் வழங்கியிருக்கிறோம். தனித் தொகுதிகள் 3, பொது தொகுதி 1 என 4 தொகுதிகளை விசிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். தமிழகத்தில் நிலவுகின்ற அரசியல் பிரச்னைகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும், அதற்கான உத்திகள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

2019 முதல் இந்தக் கூட்டணி கட்டுக்கோப்புடன் இயங்கி வருகிறது. அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி தொடர்ந்து பல தேர்தலைச் சந்தித்திருக்கிறது என்றால் அது திமுக கூட்டணியாக தான் இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் அதிமுக உள்பட பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி உருவானது. ஆனால், அந்தக் கூட்டணி தற்போது சிதறியிருக்கிறது. அப்படியாக இல்லாமல் கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கூட்டணியாக திமுக கூட்டணி இயங்கி வருகிறது. மேலும், அது இண்டியா கூட்டணி என்கிற அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. அகில இந்திய அளவில் 28 கட்சிகள் அங்கம் வகிக்கக்கூடிய மெகா கூட்டணியாக உருவாகியிருக்கிறது. இதில் விசிகவும் அங்கம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைச் செயல் திட்டத்துடன் இண்டியா கூட்டணி இயங்கி வருகிறது.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெறும். இதில் எவ்விதப் பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

எங்களது கோரிக்கையை டி.ஆர். பாலு தலைமையிலான குழுவிடம் வைத்துள்ளோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும். எந்தெந்த தொகுதிகள் என்பதை அப்போது அறிவிப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 7 தனித் தொகுதிகளில் 4 தனித் தொகுதிகளைக் கொடுத்து அதில் 3 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். வடமாவட்டங்களில் இருக்கக்கூடிய சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளைக் கொடுத்துள்ளோம். பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 பொது தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்" என்றார் திருமாவளவன்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை இடத்தையும் ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in