தேசிய கீதத்துடன் முடிந்த கூட்டத்தொடரின் முதல் நாள்: வெளியேறிய ஆளுநர்

ஆளுநர் உரையை அவைக் குறிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுவதுமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றம்.
தேசிய கீதத்துடன் முடிந்த கூட்டத்தொடரின் முதல் நாள்: வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலிக்கப்படாததற்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாள் தேசிய கீதத்துடன் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 10 மணிக்குக் கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுவதுமாக வாசிக்காமல், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரையிலிருந்து மாறுபடுவதாகக் கூறி உரையைப் பாதியில் நிறுத்திக்கொண்டார்.

எனினும், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தவற்றையும் தான் வாசிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை முழுமையாக வாசித்தார்.

இதன்பிறகு, "உங்கள் (ஆளுநர்) கருத்தை நீங்கள் கூறினீர்கள். எங்களுடைய கருத்தை நாங்கள் கூறுகிறோம். வெள்ளம், புயல் ஏற்பட்டபோதிலும் ஒரு பைசா பணம் தரவில்லை. இந்திய மக்களால் கணக்குக் கேட்க முடியாத அளவுக்கு பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியத்தில் உள்ளது. இதிலிருந்து ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கேட்கலாமே. சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு தமிழக சட்டமன்றம் சற்றும் குறைந்தவர்கள் அல்ல" என்று ஆளுநருக்குப் பதிலளிக்கும் வகையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசினார்.

சட்டப்பேரவைத் தலைவர் உரைக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். ஆளுநர் வெளியேறும்போது தேசிய கீதம் இனிதான் ஒலிக்கப்படவுள்ளது என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். எனினும், ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை அவைக் குறிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுவதுமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இத்துடன் கூட்டத் தொடரின் முதல் நாள் முடிவுக்கு வந்தது. தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இல்லை. இதற்கு முன்பே அவர் வெளியேறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in