"முரண்படுகிறேன்": உரையைப் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி

தேசிய கீதம் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு
"முரண்படுகிறேன்": உரையைப் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுவதுமாக வாசிக்காமல் பாதியில் நிறுத்திக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 10 மணிக்குக் கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுவதுமாக வாசிக்காமல், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரையிலிருந்து மாறுபடுவதாகக் கூறி உரையைப் பாதியில் நிறுத்திக்கொண்டார்.

உரையில் ஆளுநர் தெரிவித்ததாவது:

"2024-க்கான முதல் கூட்டத்தில் எனது உரையை நிகழ்த்துவதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்தப் புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களைக் காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றைக் குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்பநிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்து ஒரு நாட்டுக்கு அழகு.

நண்பர்களே.. நான் திரும்பத் திரும்ப வைக்கும் கோரிக்கையும், அறிவுரையும் என்னவென்றால், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கி, அதை கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், இறுதியிலும் ஒலிக்க வேண்டும். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த உரையில் நிறைய அம்சங்கள் உள்ளன. தார்மீக ரீதியாகவும், தரவுகள் ரீதியாகவும் அதில் நான் முரண்படுகிறேன்."

இதனைத் தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் அமர்ந்துகொண்டார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசிக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கேற்ப ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதில் ஆளுநர் புறக்கணித்ததைத் தான் வாசிப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை அப்பாவு முழுவதுமாக வாசிக்கத் தொடங்கினார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in