சட்டப்பேரவையில் நடந்தது என்ன?: ஆளுநர் மாளிகை விளக்கம்

"சட்டப்பேரவைத் தலைவர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இது முடியும் வரை ஆளுநர் அங்கு அமர்ந்திருந்தார்."
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?: ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 10 மணிக்குக் கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுவதுமாக வாசிக்காமல், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரையிலிருந்து மாறுபடுவதாகக் கூறி உரையைப் பாதியில் நிறுத்திக்கொண்டார். எனினும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். மேலும், சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு தமிழக சட்டமன்றம் சற்றும் குறைந்தது அல்ல என்றும் அப்பாவு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். தேசிய கீதம் இனிதான் ஒலிக்கப்படவுள்ளது என ஆளுநர் வெளியேறும்போது அப்பாவு தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிகழ்ந்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாடு அரசிடமிருந்து ஆளுநர் உரையின் வரைவு கடந்த 9-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு வந்தது. இதில் நிறைய அம்சங்கள், உண்மைக்குப் புறம்பாக இருந்தன.

ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவருக்கு ஏற்கெனவே கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வெளிப்பாடாக ஆளுநர் உரை இருக்க வேண்டும். மாறாக ஒரு சார்புடைய அரசியல் பார்வையைக் கொண்ட கருத்துகளை அப்பட்டமாகப் பேசுவதற்கும், தவறான கருத்துகளைப் பதிவு செய்வதற்குமான ஒரு தளமாக ஆளுநர் உரை இருந்துவிடக் கூடாது. இவ்விரு அறிவுரைகளுடன் ஆளுநர் தனக்கு வந்த கோப்புகளைத் திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் அறிவுரைகளைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்துவிட்டது.

சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு உரையாற்றிய ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து, உரையில் முதல் பத்தியில் இடம்பெற்றிருந்த திருவள்ளுவரின் 738-வது குரலை ஆளுநர் வாசித்தார்.

இதன்பிறகு, உரையிலிருந்த பல்வேறு அம்சங்கள் உண்மைக்குப் புறம்பாக, தவறாக வழிநடத்தும் வகையில் இடம்பெற்றிருப்பதால் உரையைத் தொடர்ந்து வாசிக்க முடியாது என்றும் அப்படி வாசித்தால் அரசியலமைப்பைக் கேலிக்கூத்தாக்கும் செயலாக அமைந்துவிடும் என்பதாலும் உரையை வாசிக்க முடியாது என்பதை ஆளுநர் வெளிப்படுத்தினார். சட்டப்பேரவைக்கான உரிய மரியாதையுடன், கூட்டத்தொடரில் தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

இதன்பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இது முடியும் வரை ஆளுநர் அங்கு அமர்ந்திருந்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் உரையை நிறைவு செய்த பிறகு, தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்து நின்றார். ஆனால், நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக சட்டப்பேரவைத் தலைவர், ஆளுநருக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்து, அவரை நாதுராம் கோட்சே மற்றும் பலரைப் பின்பற்றுவர் என்று அழைத்தார். சட்டப்பேரவைத் தலைவரின் வழக்கத்துக்கு மாறான இந்த நடத்தை, அவரது இருக்கைக்கான கண்ணியத்தையும், அவை மாண்பையும் குறைத்துக்கொண்டது.

சட்டப்பேரவைத் தலைவர், ஆளுநருக்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியவுடன், தனது பதவி மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in