அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

கடந்த வருடம் ஜூன் 14 அன்று அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
1 min read

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த வருடம் ஜூன் 14 அன்று அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டார். போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகச் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் அதன் ஆவணங்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. நான் ஓர் அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளைக் கலைக்க மாட்டேன் என்று செந்தில் பாலாஜி, ஜாமீன் மனுவில் கோரிக்கை விடுத்தார். ஜாமீன் கிடைக்காதபோதும், சிறையில் இருந்தபடி இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்து வந்தார்.

இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடைநிலை ஊழியர் ஒருவர் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே, உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், செந்தில் பாலாஜி கடந்த 230 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் கேள்வி எழுப்பியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராகப் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in