சென்னைக்கு ஞாயிறன்று வரும் ஜெ.பி. நட்டா: கூட்டணி உறுதி செய்யப்படுமா?

சென்னைக்கு நாளை வரும் பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களை...
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)ANI

சென்னைக்கு நாளை வரும் பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார். ஜி.கே. வாசனும் ஏ.சி. சண்முகமும் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னைக்கு நாளை வரும் ஜெ.பி. நட்டாவை, கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளார்கள். குறிப்பாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டவர்கள் தனித்தனியாகச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக தவிர்த்த புதிய கூட்டணியைத் தமிழகத்தில் அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியைக் கட்டமைப்போம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வந்துள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் புதிய நீதிக்கட்சி பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

அதே நேரத்தில் புதிய தமிழகம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசி, கூட்டணி குறித்து அடுத்து வாரம் முடிவெடுக்கப்போவதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நாளை மதியம் சென்னைக்கு வரும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, காட்டாங்கொளத்தூரில் பாஜக நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் நட்டாவைத் தனித்தனியாகச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இதுவரை எவரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in