தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டி சிக்கல்களுக்குத் தீர்வு: கனிமொழி உறுதி

ஜிஎஸ்டி தொடர்பான குழப்பங்கள் குறித்தும், தொழில் செய்பவர்களுக்கான உள்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்திருப்பதாக கனிமொழி விளக்கம்
கனிமொழி (கோப்புப் படம்)
கனிமொழி (கோப்புப் படம்)ANI

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைக் குழு தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் தேர்தல் அறிக்கை தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறியதாவது:

தமிழகம் முழுவதுமுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்து விவசாயிகள், தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயார் செய்து வருகிறோம். கோவையில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அமைப்புகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் ஏற்கெனவே பண மதிப்பிழப்புக் காலத்தில் தொடங்கி, கொரோனா பாதிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஜிஎஸ்டி பெரும் சுமையாகியிருப்பதாகவும் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஜிஎஸ்டி தொடர்பான குழப்பங்கள் குறித்தும் தொழில் செய்பவர்களுக்கான உள்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் எங்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. சட்டமன்றத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு விஷயங்களை நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசுதான் காரணம். அவர்கள் எந்தளவுக்குத் தமிழ்நாடு விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்குக் குறைவான நிதி ஒதுக்கீடுதான் கிடைத்தது. எனினும் எங்களால் முடிந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றி வருகிறோம். தொழில்துறையினரின் பிரச்னைகளைச் சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர்கள் அல்லது சிறுகுறு தொழில் செய்பவர்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு வருகிறோம். கோவை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறு, குறு தொழில்களை பாதிக்கும் ஜிஎஸ்டி சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக இடம்பெறவிருக்கின்றன என்று பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதில் மக்களும் தங்களுடைய பங்களிப்பை செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை நேரடியாக அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கலாம். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in என மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ கோரிக்கையை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in