ஸ்பெயினிலிருந்து ரூ. 3,440 கோடிக்கு முதலீடுகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"மக்களுக்குத் தொண்டாற்ற யார் அரசியலுக்கு வந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்" - நடிகர் விஜய் குறித்து முதல்வர் ஸ்டாலின்
ஸ்பெயினிலிருந்து ரூ. 3,440 கோடிக்கு முதலீடுகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஸ்பெயின் பயணத்தில் ரூ. 3,440 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்வதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என். நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்கள். இதைத் தொடர்ந்து, ஸ்பெயினில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பியிருக்கிறேன். அந்த வகையில் இது மிகப் பெரிய சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.

ஸ்பெயினில் முதல் நிகழ்வாக ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவன குழுமங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்கள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்புப் பொறுப்பாளர்கள், ஸ்பெயினில் முதலீடு செய்யலாம் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இருக்கும் உகந்த சூழல் குறித்து எடுத்துக்கூறி, நம்ம மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.

இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாள்களில், அந்த நாட்டில் செயல்படுகிற முன்னணி நிறுவனங்களினுடைய நிர்வாகிகளை தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டேன். இந்த நிறுவனங்கள் தங்களது தொழில் திட்டங்களை விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தங்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த முயற்சிகளின் பயனாக ரூ. 3,440 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்வதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹபக் லாய்டு நிறுவனம் ரூ. 2,500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோகா நிறுவனம் ரூ. 400 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த நாள்களில் மேற்கொண்டு பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

"அடுத்தகட்ட பயணம் குறித்து திட்டமிடும்போது அறிவிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு பிறகுதான் எனது பயணம் அமையும். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையைப் பார்த்தேன். பாஜக எதிர்க்கட்சியைப் போலவும், காங்கிரஸ் ஆளும்கட்சியைப் போலவும் அவர் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது புரியாத புதிராக உள்ளது. 400 இடங்களைக் கைப்பற்றுவதாகப் பிரதமர் பேசினார். மொத்தம் 543 இடங்கள் உள்ளன. அதையும் பாஜக கைப்பற்றும் என்று அவர் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி இறுதியாகப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in