14 இடங்கள் கொடுத்தால் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை

"அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/imPremallatha

14 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் கொடுப்பவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை, கட்சியினுடைய நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தல். கட்சியினுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"தேமுதிகவின் வளர்ச்சி மற்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கவிருக்கும் நிலைப்பாடு குறித்து ஆலோசத்தோம். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கூறியது வரவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்றார்கள். விஜயகாந்த் இல்லாமல் நாம் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் இது. அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். இந்தத் தேர்தலில் விஜயகாந்த் வகுத்த வழியில் தனித்துக் களம் காண்போம் என்பது மாவட்டச் செயலாளர்கள் கருத்து.

இருந்தபோதிலும், கூட்டணியைப் பொறுத்தவரை 2014 நாடாளுமன்றத் தேர்தலைப் போல, எந்தக் கூட்டணியில் 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைத் தருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பது மாவட்டச் செயலாளர்களின் இறுதி முடிவாக இருந்துள்ளது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in