உதகை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
கோப்புப்படம்
கோப்புப்படம்

உதகையில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. தடுப்புச் சுவர் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்படும் பணிகள் நடைபெற்று வந்தன. பள்ளம் தோண்டப்பட்டு வந்த இடத்துக்கு அருகே பயன்படுத்தப்படாத நிலையில் கழிப்பிடம் ஒன்று இருந்தது. பள்ளம் தோண்டப்பட்டு வந்தபோது கழிப்பிடக் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்கள்.

தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டன. மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் 1 ஆண் மற்றும் 7 பெண்களை மீட்டார்கள்.

இந்த விபத்தில் ராதா, பாக்கியம், முத்துலட்சுமி, உமா, சங்கீதா மற்றும் சகிலா ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். இதில் காயமடைந்த ஜெயந்தி, சாந்தி, தாமஸ், மகேஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து, தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in