அண்ணாமலையின் 'அரசு வேலை' வாக்குறுதி சாத்தியமா?: பிடிஆர் விமர்சனம்

வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா...
அண்ணாமலையின் 'அரசு வேலை' வாக்குறுதி சாத்தியமா?: பிடிஆர் விமர்சனம்
ANI

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வாக்குறுதிக்குத் தமிழ்நாட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இரு நாள்களுக்கு முன்பு வேலூரில் நடைப்பயணத்தை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில், 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதியளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"2026-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டில் இதுவரை எந்தக் குடும்பத்தில் ஒரு தலைமுறையினருக்குக் கூட அரசு வேலை கிடைக்கவில்லையோ, அவர்களுக்குக் கட்டாயம் அரசு வேலை கொடுக்கப்படும். 7 தலைமுறையாக அரசு வேலையில் கால்பதிக்காமல் இருக்கும் குடும்பத்திலிருந்து பிறந்த பட்டதாரி என்றால், உங்களுக்கு அரசு வேலை கட்டாயம் வழங்கப்படும். அது உங்களுடைய உரிமை” என்றார்.

அண்ணாமலையின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளானது.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அண்ணாமலையின் கருத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

"ஒரு ஒப்பீட்டுக்கு, தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 9.5 லட்சம். சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக கூறுகிறுது. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்!

அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் விமர்சகர் சுமந்த் ராமனின் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

"சீமானுக்குக் கடும் போட்டியாகத் திகழ்கிறார். கணக்குப் போட்டு பார்க்கலாம். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளார்கள். அதாவது குடும்பத்துக்கு 4 பேர் என்கிற வீதத்தில் 80 லட்சம் மக்கள் தொகை இதில் உள்ளடங்குகிறது. தமிழ்நாட்டில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ளது. ஏறத்தாழ 1.7 கோடி குடும்பங்கள் உள்ளன.

வாதத்துக்காக, இதில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் கடந்த காலத்தில் அரசு ஊழியராக எவரேனும் பணியாற்றியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கற்பனைக்கு வைத்துக்கொள்வோம்.

இப்படிப் பார்த்தாலும்கூட இன்னும் 80 லட்சம் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே 20 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கும் நிலையில், மேற்கொண்டு 80 லட்சம் ஊழியர்களுக்குப் பணியில் வாய்ப்பளிக்கப் போகிறதா அரசு?

இது எப்படிச் சாத்தியம் என்பதைத் தமிழக பாஜகவிலிருந்து யாராவது விளக்க முடியுமா? இதற்கான ஊதியங்கள் சட்ட மசோதா என்னவாக இருக்கும்? இதற்கான நிதி எங்கிருந்து வரப்போகிறது?" எனப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in