ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்: ஸ்பெயினிலிருந்து முதல்வர் ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என். ரவி பிப்ரவரி 12 அன்று கூட்டியுள்ளார்...
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்: ஸ்பெயினிலிருந்து முதல்வர் ஆலோசனை
படம்: https://twitter.com/TNDIPRNEWS

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 12 அன்று கூடவுள்ள நிலையில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினிலிருந்து காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என். ரவி பிப்ரவரி 12 அன்று கூட்டியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பைச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடந்த 1-ம் தேதி வெளியிட்டார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 அன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 8 அன்று தமிழ்நாடு திரும்புகிறார்.

இந்நிலையில் ஸ்பெயினிலிருந்தபடியே காணொளி மூலம் ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித் துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். முன்னதாக அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவினரைத் தயார்படுத்தும் விதமாகத் தேர்தல் குழுவினருடன் காணொளி வாயிலாக ஆலோசனையும் மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in