அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்படம்: திமுக ஐடி விங்

திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை தொடர்ந்து, திமுகவுடன் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக மும்முரமாக நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், துணைச் செயலாளர் வீரபாண்டி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் டி.ஆர். பாலு தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கமான அணுகுமுறையை உணர்ந்ததாகவும், கடந்த முறை போட்டியிட்டதைக் காட்டிலும் கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையில் கனகராஜ், பெ. சண்முகம், என். குணசேகரன் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

அப்போது சம்பத் கூறியதாவது:

"பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. இருதரப்பும் மனம் திறந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். கூடுதல் இடங்களைப் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும். நாங்களும் கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்தோம். இருதரப்புக்கும் சுமூகமான நல்ல உடன்பாடு எட்டப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. முதல்வர் வந்தவுடன் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்."

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை தொடர்ந்து, திமுகவுடன் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in