துரைமுருகனை விடவும் எனக்கு நிதித்துறை பற்றி அதிகமாகத் தெரியும்: அண்ணாமலை

ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ ஃபைனான்ஸ் படித்துள்ளேன்...
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

அமலாக்கத் துறையினருக்குக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருடைய இல்லத்தின் கதவை அமலாக்கத் துறையினர் எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதுதொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "அமலாக்கத் துறையினருக்குக் கதவைத் திறப்பதற்கான சிரமத்தைக்கூட நாங்கள் கொடுக்க விரும்பவில்லை. கதவை நாங்களே திறந்து வைத்துக்கொள்கிறோம்" என்று கிண்டலாகப் பேசினார்.

துரைமுருகனின் பதில் குறித்து இன்று அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது.

அப்போது அண்ணாமலை கூறியதாவது:

"இதே துரைமுருகன், கதிர் ஆனந்த் இல்லத்தில் இதற்கு முன்பு செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி கூறியது என்ன?. கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வேறு, திமுகவிலுள்ள துரைமுருகன் வேறு என ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்கள். இதைப் பார்த்தால் அவர்கள் அச்சப்படவில்லை என்று சொல்ல முடியுமா?. எனவே, உப்பு சாப்பிட்டால் அவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். உப்பு சாப்பிட்டுள்ளார்களா என்பதை நீங்கள் துரைமுருகனிடம்தான் கேட்க வேண்டும். ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ ஃபைனான்ஸ் படித்துள்ளேன். 10 லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99.4% மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சியடைந்தேன். நிதித்துறை குறித்து கொஞ்சம் தெரியும். துரைமுருகனுக்குத் தெரிந்ததை விடவும் எனக்கு அதிகமாக நிதித்துறை பற்றி தெரியும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in