பழனி கோயிலில் அறிவிப்புப் பலகை: உயர் நீதிமன்ற மறுவிசாரணைக்காகக் காத்திருக்கும் அறநிலையத் துறை

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,339 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சு
பழனி கோயிலில் அறிவிப்புப் பலகை: உயர் நீதிமன்ற மறுவிசாரணைக்காகக் காத்திருக்கும் அறநிலையத் துறை
ANI

பழனி திருக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்த உயர் நீதிமன்றத்தின் மறு விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக தமிழ்நாட்டு அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்ற வாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெளியிட்ட உத்தரவு சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.

இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வரும் திருப்பணிகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,339 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"ரூ. 4.41 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திருக்குளங்கள் உருவாக்கிடவும், ரூ. 78.44 கோடி மதிப்பீட்டில் 122 திருக்குளங்கள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2,359 திருக்குளங்களையும் தொடர்ந்து கண்காணித்துப் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான வல்லுநர் குழு இதுவரை 8,186 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளங்கள், திருத்தேர்கள், பசுமடங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள், விருந்து மண்டபங்கள் முடி காணிக்கை மண்டபங்கள் என ரூ. 4,157.70 கோடி மதிப்பீட்டிலான 18,788 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன " என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு ஆன்மீகப் பயணங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஆடி மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் முன்னதாக அறநிலையத் துறை சார்பாக இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in