கேலோ இந்தியா - தமிழகம் 2-வது இடம்: திராவிட மாடல் அரசே காரணம் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஜனவரி 19 அன்று சென்னையில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், நிறைவடைந்துள்ளன...
கேலோ இந்தியா - தமிழகம் 2-வது இடம்: திராவிட மாடல் அரசே காரணம் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு இருக்க முடியும் என்பதை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தியிருப்பதன் மூலம் தமிழக அரசு நிரூபித்துள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 19 அன்று சென்னையில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், புதன் கிழமை (டிசம்பர் 31) நிறைவடைந்தன. இதன் நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்துத் தகுதியும் உள்ளது. பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு இம்முறைதான் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களைக் கண்டறிய வாய்ப்பாக அமைந்தது. விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது.

அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக கிராமங்களில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் வரவேண்டும் என்பது திமுக அரசின் எண்ணம்" என்று பேசினார்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து 12 நாள்களாக நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகளில் தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in