ஹிந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குச் செல்லத் தடை: மறுபரிசீலனை செய்ய முத்தரசன், கிருஷ்ணசாமி கோரிக்கை

அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாகக் கருதியும், மதித்தும் வரும் தமிழ்நாட்டின் நல்லிணக்கப் பண்புக்கு இது எதிரானது என்று கருத்து.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைANI
1 min read

பழனி உள்பட தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்குள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் செல்வதற்குத் தடை விதித்தும், அறிவிப்புப் பலகைகள் வைக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு முத்தரசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார். அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாகக் கருதியும், மதித்தும் வருகிற தமிழ்நாட்டின் நல்லிணக்கப் பண்புக்கு இது எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

நாகூர் தர்க்காவிலும், அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், பழனி திருக்கோயிலுக்கும், அனைத்து சமய நம்பிக்கை உள்ளவர்களும் சென்று வருவது நடைமுறையில் உள்ளது. சமய வழிகள் வேறுபட்டாலும் எல்லா சமயங்களும் அன்பு, கருணை, இரக்கம் சகிப்புத் தன்மை என நல்லிணக்க உணர்வைத்தான் போதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, நீதிபதியின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தக்கூடியதாக உத்தரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பழனி திருக்கோயிலில் ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, அனைத்துத் தமிழர்களும் வழிபடக்கூடிய நிலையில் சித்தர் பீடமாக உள்ளது போன்ற காரணத்தினால் பிற சமயத்தவர்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in