தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடமில்லை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

"குடியுரிமைத் திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஒரே வாரத்தில் நாடு முழுக்க அமல்படுத்துவோம் என மத்திய இணை அமைச்சர் ஷாந்தனு தாக்குர் கொல்கத்தாவில் பேசியிருந்தார். இந்தச் செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் கால்வைக்க விடமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்த மசோதா சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கால்வைக்க விடமாட்டோம்!"

இந்தப் பதிவுடன் தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடமில்லை என்கிற ஹேஷ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in