சிஏஏ-வால் ஏற்படும் பாதிப்பை அதிமுக அனுமதிக்காது: எடப்பாடி பழனிசாமி

"கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவிற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக அனுமதிக்காது என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஒரே வாரத்தில் நாடு முழுக்க அமல்படுத்துவோம் என மத்திய இணை அமைச்சர் ஷாந்தனு தாக்குர் கொல்கத்தாவில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டினுள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கால்வைக்க விடமாட்டோம்!" என்றார். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான் என அதிமுகவையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, சிறுபான்மையின மக்களின் அரணாக அதிமுக நிற்கும் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பதிவு:

"குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.

கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவிற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

சிறுபான்மை மக்களை பாதிக்கும் தேசிய புலனாய்வு முகமை, உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுகவின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in