டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம்

கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படவுள்ளன.
டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம்
படம்: https://twitter.com/sivasankar1ss

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் (டிஎன்எஸ்டிசி) நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் (எஸ்இடிசி) பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்துதான் புறப்படுகின்றன.

தனியார் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தொடக்கத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி தனியார் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய 700-க்கும் மேற்பட்ட டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளில் 20 சதவிகிதப் பேருந்துகள் மாதவரத்திலிருந்து இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும் பேருந்துகளும் கோயம்பேட்டுக்குப் பதில் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளும், பூந்தமல்லி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in