கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்

"வட இந்தியாவில் இண்டியா கூட்டணி சிதறிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதற்கான நாள் வரும்."

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழு, பிரசாரக் குழு, பிரசாரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்கள்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

"வட இந்தியாவில் இண்டியா கூட்டணி சிதறிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதற்கான நாள் வரும். திமுகவுடன் இருப்பவர்கள் ஒரே கொள்கையில் உள்ளவர்கள் அல்ல. காங்கிரஸை கம்யூனிஸ்ட் ஏற்றுக்கொள்ளாது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்து உள்ளது. இந்தக் கூட்டணிக்குள் நிறைய முரண்பாடுகள் உள்ளன. தேர்தலுக்கும் நிறைய நாள்கள் உள்ளன.

பாஜகவுடனான கூட்டணி குறித்து எப்போது கேட்டாலும் சரி, தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரி.. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜகவைக் கழற்றிவிட்டதில் எந்த மாற்றமும் இல்லை.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என்பது கொள்கை முடிவு. அதை நான் தற்போது கூற முடியாது. தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணிக்காக எங்களுடன் இணை நிறைய பேர் வருகிறார்கள். அதுகுறித்து தற்போது கூறுவது உகந்ததாக இருக்காது. சரியான நேரத்தில் வெளிப்படையாகத் தெரிவிப்போம்" என்றார் ஜெயக்குமார்.

அதிமுகவினர் தில்லி சென்று காலில் விழுந்து தன் மீது புகாரளித்துள்ளதாக அண்ணாமலை கூறியது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:

"அண்ணாமலை பாஜகவை முன்னிலைப்படுத்தாமல் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை நடக்காத விஷயங்களைக் கூறி திசை திருப்புகிறார். தமிழ்நாட்டு மக்களும், தொண்டர்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நாங்கள் அண்ணாமலையைப்போல அண்ணே, அண்ணே, அண்ணே என்று ஊல கும்பிடு போடுபவர்கள் அல்ல. இங்கு கால் ஊன்ற நினைத்து எதை வேண்டுமானாலும் கூறலாம் என்று நினைத்தால், விழலுக்கு இரைத்த நீர் போல வீணாகத்தான் முடியும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in