காந்தியை அவமதிப்பது எனது நோக்கமல்ல: ஆளுநர் ஆர்.என். ரவி

"நான் மகாத்மா காந்தி மீது உயரிய மதிப்பை கொண்டுள்ளதுடன் அவருடைய போதனைகளை என் வாழ்க்கையின் லட்சியங்களாக உள்ளன."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மகாத்மா காந்தியை அவமதிப்பது தனது நோக்கமல்ல என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கிலேயர்கள் வெளியேற்றத்தில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் காட்டிலும், சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத் திரட்டலே அதிக தாக்கத்தை உண்டாக்கியது என்கிற வகையில் கூறினார்.

ஆளுநரின் இந்தப் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக அவர் தற்போது விளக்கம் தந்துள்ளார்.

ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கடந்த 3-4 நாட்களில் வெளியான சில ஊடகச் செய்திகள், தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்ததாக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்க முயல்கின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் மகாத்மா காந்தி மீது உயரிய மதிப்பை கொண்டுள்ளதுடன் அவருடைய போதனைகளை என் வாழ்க்கையின் லட்சியங்களாக உள்ளன.

ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாளன்று நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் எனது பேச்சில் சில வார்த்தைகளில் குறிப்பிட்டவற்றை தேர்ந்தெடுத்து நான் பேச விழைந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளன. எனது உரையில், நமது தேசத்தின் சுதந்திரத்துக்காக நேதாஜி வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விரிவாகக் கூற முயன்றேன்.

பிப்ரவரி 1946-இல் ராயல் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை என இரண்டிலும் நடந்த கிளர்ச்சிகள், நேதாஜியால் ஈர்க்கப்பட்டவர்களால் ஏற்பட்டதால்தான் 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைப்பதற்கான வேகமும் செயல்முறையும் துரிதமாகின என்ற கருத்தை நான் பதிவு செய்ய விழைந்தேன். ஏனென்றால் இந்தக் கிளர்ச்சிகள் காரணமாகவே, பிரிட்டிஷார் பீதியடைந்தனர்.

ஏனென்றால் சீருடையில் இருந்த இந்தியர்களை இனியும் நம்பமுடியாது, சொந்த பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் பாதுகாப்பு இருக்காது என பிரிட்டிஷார் கருதினர். இந்தக் கிளர்ச்சிகள் 1946, பிப்ரவரியில் நடந்தன. அதற்கு அடுத்த மாதமான 1946, மார்ச் மாதமே இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக ஆங்கிலேயர்கள் பகிரங்கமாக அறிவித்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ந்தெழுந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியல் நிர்ணய சபையை அமைத்தனர். இவை, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குள் இருத்தலியல் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

கடற்படை மற்றும் விமானப்படை கிளர்ச்சிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய தேசிய ராணுவத்தின் போர் உட்பட நேதாஜியின் புரட்சிகர நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவை. 1942, ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், அதன் தொடக்க வெற்றிக்குப் பிறகு வேகத்தை இழந்திருந்தது.

இந்திய பிரிவினைக்கான முஸ்லிம் லீக்கின் தீவிர நிர்பந்தம் மற்றும் களத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக பிரிட்டிஷாரே மகிழ்ச்சியடையும் வகையில், தேசிய சுதந்திர இயக்கத்தில் ஏற்பட்ட உள்மோதல்கள், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பெரும் முயற்சிகள் மற்றும் ஆற்றலை பயன்படுத்தினார்கள். பிரிட்டிஷாரால் மேலும் சில ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்திருக்க முடியும். ஆனால், நேதாஜியின் ஆயுதப் புரட்சி மற்றும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான அதன் மோசமான விளைவு காரணமாக அப்படி எதுவும் நடக்காமல் போனது. நான் பேசிய அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகளே. என் வாழ்வின் வழிகாட்டியாக மகாத்மா காந்தியின் போதனைகள் உள்ளன. அவரை அவமதிப்பது எனது நோக்கம் இல்லை."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in