திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திருப்தி: கே.எஸ். அழகிரி

"போட்டியிட விருப்பமுள்ள 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை."
பேச்சுவார்த்தைப் புறப்படும் முன் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு
பேச்சுவார்த்தைப் புறப்படும் முன் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுகவும், காங்கிரஸும் இன்று தொடங்கின. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றார்கள். அங்கு திமுக சார்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி கூறியதாவது:

"தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகும் விரைவில் பேசுவோம் என்பதைத் தவிர இதுகுறித்து சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. எத்தனை இடங்கள் கேட்டுள்ளோம், எந்தெந்த இடங்களைக் கேட்டுள்ளோம் என்பது இரு கட்சிகளுக்கு உள்பட்டது.

40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது, எப்படி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, பிரசாரங்களை எப்படி மேற்கொள்வது, பாஜக மற்றும் அதிமுகவை எப்படி எதிர்கொள்வது, கூட்டணிக் கட்சிகளை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் ஒப்படைத்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், "சில விஷயங்களில் இன்னும் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தவுடன், எடுக்கப்பட்ட முடிவுகளை மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம்" என்றார்.

முன்னதாக, போட்டியிட விருப்பமுள்ள 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in