இண்டியா கூட்டணியில் நிதிஷ் குமார் வைத்த கோரிக்கை இதுதான்: டி.ஆர். பாலு

"ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்பதை நாங்கள் கூட்டணிக்காகப் பொறுத்துக்கொண்டோம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

இண்டியா கூட்டணியில் ஹிந்தியில்தான் பேச வேண்டும் என ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் கோரிக்கை வைத்ததாகவும், திமுக அதைப் பொறுத்துக்கொண்டதாகவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவும், காங்கிரஸும் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. டி.ஆர். பாலு தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் சார்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமானதாக இருந்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முகுல் வாஸ்னிக், "சில விஷயங்களில் இன்னும் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தவுடன், எடுக்கப்பட்ட முடிவுகளை மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம்" என்றார். இவர்களைத் தொடர்ந்து, டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் தேதியை வெளியிடுவோம். விருப்பப் பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவில்லை. நாங்களும் கேட்கவில்லை.

நிதிஷ் குமாருக்கு இண்டியா கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே பிரச்னை இருந்திருக்கிறது. அவருக்குக் கூட்டணியில் இருக்க விருப்பமில்லையா என்பது குறித்து தெரியவில்லை. பிரதமராக வேண்டும் என கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிதிஷ் குமார் எதையும் கூறவில்லை. அவர் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதால் பெரிய சேதம் எதுவும் இல்லை.

இண்டியா கூட்டணியில் நிதிஷ் குமாரின் திட்டம் எதுவும் நடக்காமல் போனதற்கு, அவர் எந்தத் திட்டத்தையும் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அனைவரும் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்றுதான் அவர் கோரிக்கை வைத்தார். அப்போதுகூட கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என நாங்கள் பொறுமை காத்தோம். ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்பதை நாங்கள் பொறுத்துக்கொண்டோம்.

கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என அனைத்துக் கட்சிகளுமே விரும்பும். அனைத்துக் கட்சிகளுக்கான இடத்தையும் பொறுத்தே இடங்கள் ஒதுக்கப்படும். அதுதான் கூட்டணி.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. தலைவரிடமும் நான் இதை வலியுறுத்துவேன்.

எங்களிடம் இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in