பிரதமரின் தமிழக பயணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி

பிரதமரின் மூன்று நாள் பயணமானது அலுவல் ரீதியானதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
பிரதமரின் தமிழக பயணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி
ANI

தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அலுவல் ரீதியானதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சென்னை வந்தார். தமிழ்நாட்டினுடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வைத்த கோரிக்கையை ஏற்று தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த நாள் திருச்சி சென்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். இங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு ராமநாத சுவாமி கோயிலில் வழிபட்டார். மறுநாள் சாலை மார்க்கமாக தனுஷ் கோடி சென்ற பிரதமர், கோதண்டராமர் சுவாமி கோயிலில் வழிபட்டார்.

இவரது இந்த மூன்று நாள் பயணமானது அலுவல் ரீதியானதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி என்பவர் பிரதமர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், பயண செலவுகள் குறித்த விவரத்தையும் அவர் கேட்டிருக்கிறார்.

பிரதமரின் வெளிநாட்டுப்பயணம் குறித்தும், அதற்கான செலவுகள் குறித்தும் அவ்வப்போது இதுபோன்று தகவலறியும் உரிமைச் சட்டங்களின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை ஊடகங்களில் செய்தியாக வெளியாவது வழக்கமானதுதான். பயணத்தொகை உள்ளிட்ட விஷயங்களை பிரதமர் அலுவலகமும் ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்ததுண்டு. இம்முறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் சென்னை வந்ததன் காரணமாக, தமிழக அரசைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்ற பின்னரே இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in