மக்கள் கருத்துக்குப் பிறகுதான் தேர்தல் அறிக்கை: திமுக, அதிமுக முடிவு

அடுத்த மாதம் 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் அறிக்கைக்கான விபரங்களை பெறுவதற்கு இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதல் கட்டமாக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இறங்கியுள்ளன.

இரு கட்சியினரும் தனித்தனியாக தேர்தல் அறிக்கைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் மாவட்டவாரியாக பொதுமக்களையும் கட்சித் தொண்டர்களையும் சந்தித்துப் பேச இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. அடுத்த மாதம் 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கைக்கான விபரங்களை பெறுவதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் இருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் கூடியது. அடுத்த மாதம் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோர இருப்பதாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுகவின் திட்டங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், "சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கணக்கில் கொண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி, இந்தியச் சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும்படியான தேர்தல் அறிக்கையை அதிமுக தயாரித்து வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவினர் அடுத்த மாதம் 5 முதல் 10 வரை சென்னை, சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து அறிக்கையை தயார் செய்வார்கள். தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது கட்சியில் உள்ள பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தங்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகளை குழுவினரிடம் சமர்ப்பிக்குமாறு" கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in