செய்தியாளர் நேச பிரபு
செய்தியாளர் நேச பிரபுபடம்: https://www.facebook.com/Nesa Prabhu

செய்தியாளர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்

நடவடிக்கை எடுக்காத காவல் நிலைய ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும், நேச பிரபுவின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவு
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த நேச பிரபு, தனியார் செய்தி நிறுவனத்தில் பல்லடம், சூலூர் மாவட்டச் செய்தியாளராகப் பணிபுரிகிறார். அடையாளம் தெரியாத நபர்களால் இவர் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வரும் செய்தியாளருக்கு நிவாரண நிதி வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டது குறித்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேச பிரபுவின் மருத்துவ சிகிச்சைக்காக பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தன.

"பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல். தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகத் தெரிவித்தும் காவல் துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காதது ஏன்? பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்? "என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னைத் தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது "என்று தெரிவித்திருந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in