கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாட்டில் ஏன் தாமதம் என ராமதாஸ் கேள்வி

"பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டு வருவது எளிது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதுகுறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் 2006 ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. முன்னதாக ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அமலுக்குக் கொண்டு வருவது எளிதான விஷயம்.

பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. ஆனாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஏன் தயங்கி வருகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in