திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப் பெண் சித்ரவதை: அதிமுக ஆர்ப்பாட்டம்

"அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வியாழக்கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பிப்ரவரி 1-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஒரு பொம்மை முதலமைச்சர் தலைமையில் விடியா திமுக அரசு அமைந்த இந்த 32 மாத காலத்தில், தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிரான, பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர் நிகழ்வுகளாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையின் கைகள் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களால், திமுக ரவுடிகளால் கட்டப்பட்டுள்ளது. இதை, எதிர்க்கட்சி என்ற முறையில் பலமுறை சுட்டிக்காட்டியும், எச்சரித்தும், போராடியும் வந்திருக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள் இன்னும் திருந்தவே இல்லை.

கடந்த வாரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள புகார் நாட்டையே உலுக்கி இருக்கிறது. கருணாநிதியின் மகனும், மருமகளும் வீட்டு வேலைகளை செய்வதற்கென்று, கொத்தடிமை போல தன்னை அழைத்துச் சென்று சித்ரவதை செய்த கொடூரத்தை அந்த மாணவி விவரித்த காட்சிகள் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகி, மனிதாபிமானமுள்ள அனைத்து மக்களின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது.

எதிர்க்கட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர் வலியுறுத்தலாலும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அம்பலப்பட்டுப் போனதாலும் வேறு வழியின்றி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஆனாலும் கருணாநிதியின் மகனும், மருமகளும் இப்பொழுதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகிவிட்டதாகவும், தேடி வருவதாகவும் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது இந்த விடியா திமுக அரசு.

திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார். ஆனால், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் பதவியை சொல்லித்தான் அவருடைய மகனும், மருமகளும் கொலை மிரட்டல் செய்தார்கள் என்று மாணவி நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி தனக்கு தொடர்பில்லை என்று சொல்வதும், காவல்துறை கைது செய்யாமல் காலம் கடத்துவதும், திமுக அதிகார வர்க்கம் வழக்கம்போல குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

ஏற்கெனவே, திமுக-வினரால் பெண் காவல்துறை அதிகாரி மீது பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்டபோது, அதில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது ஸ்டாலின் அரசு. கடுமையான போராட்டத்தைக் கழகம் முன்னெடுக்கும் என்று நான் எச்சரித்த பிறகே, அந்த திமுக ரவுடிகள் மீது வழக்கு பதியப்பட்டது. இது தொடர்கதையாக நடப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்த வழக்கில், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தைச் சேர்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்ற இந்த மக்கள் விரோத விடியா திமுக-அரசைக் கண்டித்தும்; பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவிவிட்ட இந்தக் கொடூர நிகழ்வில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும்; காவல்துறை செயல்படாத வண்ணம் ஏவல் துறையாக மாற்றி இருக்கின்ற பொம்மை முதலமைச்சரின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், அதிமுக சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், 1.2.2024 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in